நம்மில் பலர் நிறைய நேரம் நம் மனதினுள்ளே எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதிலும், கடந்து போன சம்பவங்களை மீண்டும் நினைத்து, யார் நம்மை என்ன சொன்னார்கள் என்பதிலேயே உழன்று, பொதுவாக நமக்கு அதிருப்தி மற்றும் வருத்தம் தரும் விஷயங்களிலேயே கவனத்தை வைக்கிறோம். எதிர்மறை எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் எதிரெண்ணங்கள் மிகத் தீவிரத்தோடு வருவதினால், அவற்றில் நாம் சிக்கிக் கொள்கிறோம். எந்தவொரு நெருங்கிய உறவிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்பது அறியப்பட்ட உண்மை. இருப்பினும், சாதாரணமான வார்த்தை பரிமாற்றம் அல்லது கருத்து வேறுபாடு நம் உணர்ச்சி எல்லைக்குள் இல்லாதபோது, சிக்கல் தொடங்குகிறது. இது நிகழும்போது, நான் சொல்வதுதான் சரி என்ற மனப்பான்மையுடன் உரையாடலில் ஆதிக்கம் செலுத்தி, புண்படுத்தும் விஷயங்களை பேசி, கடந்த காலத்தைத் தோண்டி எடுக்கிறோம். இது மனக்கசப்புக்கும் மேலும் வாதங்களுக்கும் வழிவகுத்து, மற்ற நபரை முடக்குகிறது. இத்தகைய எதிரெண்ணங்கள் நம்மை பாதித்து, நாம் தவறாக இருக்கலாம் என்பதயே ஒப்புக்கொள்ள விடா. நமக்கு ஒரு எதிரெண்ணம் இருக்கும்போது (வெளிப்படுத்தப்பட்ட அல்லது வெளிப்படுத்தப்படாத) நாம் நம் நடத்தையை முற்றிலும் நியாயப்படுத்தி, மற்றவரே தவறு செய்தவர் என எப்போதும் உணர்கிறோம். உள்முக சிந்தனைக்கு இடமளிப்பதே இல்லை.